C1

Bala

Thursday, August 14, 2014

நண்பர்கள் தினம்!!



இன்று நண்பர்கள் தினம்!!

"உன் நண்பனைச் சொல்; நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்!" என்று ஒரு வாக்கியம் உண்டு...

நண்பர்களைத் தேர்ந்து எடுப்பதில் கவனம் வேண்டும்.
"மச்சி!! ஓப்பன் த பாட்டீல்!" என்பதல்ல நல்ல நட்பு...

நாம் தவறாக நடக்க முற்படுகையில், நம்மைத் தடுத்து சரியான பாதையினைக் காட்டுவதே நல்ல நட்பு.

உன் மனசு பாரமாயிருக்கும் போது...
உன் நண்பனைப் போய் பார்...
உன் மனசு லேசாகும்!!

அவன் கரம் பற்றி நடக்கும் போதும்...
அவன் தோளில் நீ சாயும் போதும்...
உனக்குள் இருக்கும் அந்த பாரம் மெல்லக் குறைவதை
உணர முடியும்...

நட்பு என்பதும் சாதாரணமானது அல்ல!!
அதுவும் ஒரு தேன் கூடு போலத் தான்...
கட்டிப் பார்த்தவர்களுக்குத் தான்
அதன் இனிமை தெரியும்!!
அதைக் கலைக்க நினைப்பவர்களும்
நிச்சயம் தொலைந்து தான் போவார்கள்!!

வருடங்கள் பல கடந்தாலும் இன்னும் நம்மை இளமையாகவே வைப்பது நம் நட்பும், நல்ல நண்பர்களும் தான்!!
நாம் பழகும் அத்தனை பேரும்
நமக்கு நண்பர்கள் ஆகி விட முடியாது...
வேலை நிமித்தம் சிலர் பழகலாம்...
இருக்கும் இடத்தில் சிலர் பழகலாம்...

உன் தோள் பற்றும் தோழமை...உன் நண்பனிடம் மட்டுமே இருக்கும்...

இந்தப் பதிவோடு நான் இணைத்திருக்கும் படத்தில் நான் என் நண்பர்களோடு இருக்கிறேன்!! 90 களில் தொடங்கிய நட்பு இது!!
இருபத்து ஐந்து வருடங்கள் கடந்து போனதை நினைத்தால் மலைப்பாகவே இருக்கிறது...இந்தப் படத்தில் சாய்ந்து நிற்கும் என் நண்பன் செந்தில் மட்டும் இப்போது எங்களோடு இல்லை!!

இப்பவும் எங்கள் மனசுக்குள் அவன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான்...

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள்!!
நல்ல நண்பன் அமைவதும் கூட அப்படித்தான்!!

ஆடி அமாவாசை!!


இன்று ஆடி அமாவாசை!!
முன்னோர்களை நினைத்து வணங்கும் நாள்!!

இருக்கும் வரை யாரும் யாரையும் மதிப்பது இல்லை...
அதற்கு நம்முடைய வேலையையும் வந்து செல்ல ஆகும் செலவையும் கூட காரணமாகச் சொல்லுவது உண்டு!!
இல்லாமல் போன பிறகு...

படத்தில் இருப்பது என்னுடைய அம்மா ஆச்சியும், தாத்தாவும்.
அவர்களை அவ்வப்போது அவர்களது வீட்டுக்குப் போய் பார்த்து விட்டு வருவது வழக்கம்...அப்போது ஆச்சி போட்டுத் தரும் பால் இல்லாத காபியும், தாத்தா உடனே கடைக்குப் போய் பேரப் பிள்ளை வந்திருப்பதாகச் சொல்லி வாங்கி வரும் வடையும் இன்றும் நினைவில்...

ஆச்சி கிராமத்தில் இருந்தாலும் ரொம்பவே மாடர்ன்!!
போகும் போதெல்லாம் தொலைக்காட்சியில் சொல்லித்தரும் ரெஸிபிக்களை வைத்து புதுசு புதுசாக எதாவது செய்து தருவார்கள்!! ஒரு நாள் அவர்கள் தந்த கேரட் அல்வா இப்போதும் இனிக்கிறது!!

வளர்ந்து பெரியவனாக நாம் இருந்தாலும், நம்மையும் குழந்தையாகவே பார்க்கும் அந்தப் பாசமும் பிரியமும்...இப்போது நினைத்தாலும் சுகமாகவே இருக்கிறது!!

இன்று இருவருமே இல்லை!!
அந்த கிராமத்தை இன்றும் கடந்து போகையில்...
அவர்கள் வசித்த அந்த வீடும் கடந்து போகிறது...
ஆனால், இப்போது இந்தப் படத்தில் பார்ப்பது போலவே
அவர்கள் நிற்பது போல் தோன்றுவதும், மனசிற்குள் ஒரு பந்து உருளுவதையும் உணர முடிகிறது!!